5 ஸ்டார் கதிரேசன் “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார்

5 Star Kathiresan Acquires Ayyappanum Koshiyum Tamil Remake Rights
5 Star Kathiresan Acquires Ayyappanum Koshiyum Tamil Remake Rights

5 ஸ்டார் கதிரேசன் “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார்

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம் எனக் கூறப்படும் கேரள மண்ணின், சமீப கால திரைப்படங்கள், உலகம் முழுதும் கவனம் ஈர்த்து வருகின்றன. எளிய மக்களின் கதைகளை கலாச்சாரத்துடன், பலமான திரை மொழியில் கூறி வரும் மலையாள படங்கள் எல்லைகள் கடந்து, அனைத்து மக்களையும் கவர்ந்திழுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று பெரு வெற்றி அடைந்துள்ளது. வசூலிலும் விநியோகஸ்தர்களை பெரிய அளவில் திருப்தி படுத்தியிருக்கிறது இந்த திரைப்படம். மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியுள்ள இந்தப்படம் போன்று தமிழில் ஒரு படம் வெளியாகுமா என ரசிகர்கள் ஏங்கிய நிலையில், அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தும் ஒரு ஆச்சர்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் மிகச்சிறந்த படங்கள் தந்த, மிக முக்கிய தயாரிப்பாளராக விளங்கும் 5 ஸ்டார் கதிரேசன் “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் கூறியதாவது…

மிகச்சாதாரண சினிமா ரசிகன் போலவே இந்தப்படம் பார்த்து நானும் பிரமித்து போனேன். அரிதிலும் அரிதாக, வெகு சில திரைப்படங்களே தொடக்கம் முதல் முடிவு அனைத்து அம்சங்களும் பொருந்தி வந்து நம்மை முழுதாக பரவசப்படுத்தும். படத்தின் திரைக்கதை, கதை சொல்லப்பட்டிருக்கும் பின்னணிகளம், அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அனைத்தையும் தாண்டி கதையை தாங்கும், ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் பிரமிப்பான நடிப்பு, இவையனைத்தும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றியது மகிழ்ச்சி என்றாலும் இப்போது மிகப்பெரும் பொறுப்புணர்வு உருவாகியிருக்கிறது. இப்படத்தை அதன் சாரம் கெடாமல், தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு, மலையாளப்பதிப்பின் மதிப்பு கெட்டுவிடாமல், ரீமேக் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. தமிழின் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தின் ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிக விரைவில் தமிழ் பதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.